கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி: கலெக்டர், மேயர் சுந்தரி ராஜா பங்கேற்பு
- மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
கடலூர்:
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1. 11.1956 -ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது. இந்த நிலையில் ஜூலை 18- ம் நாள் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை இன்று( 18 ந்தேதி) முதல் வருகிற 23- ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல்கலெக்டர் மதுபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.