உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

Published On 2023-09-11 03:14 GMT   |   Update On 2023-09-11 03:16 GMT
  • பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீதும், அசம்பாவிதம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி அரசியல் தலைவர்கள், சமுதாயத்தலைவர்கள், கிராமப்பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பு பணிகளில் 3 டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 6 ஆயிரம் வெளி மாவட்ட போலீசாரும், ராமநாதபுரம் மாவட்ட போலீசார் 2 ஆயிரம் பேர் உள்பட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 161 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரமக்குடியில் மட்டும் 200 கண்காணிப்பு கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அனைத்தும் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீதும், அசம்பாவிதம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News