உள்ளூர் செய்திகள்

பிரபல நகைக்கடையில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது

Published On 2022-07-24 05:50 GMT   |   Update On 2022-07-24 05:50 GMT
  • கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.
  • சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள பாளை ரோட்டில் ஒரு பிரபல ஜவுளிக்கடையுடன் இணைந்த நகைக்கடை இயங்கி வருகிறது.

இந்தக் கடையின் நகைக்கடை பிரிவுக்கு நேற்று மாலை டிப்-டாப்பாக உடை அணிந்து 2 பெண்கள் வந்தனர். கடையில் உள்ள நகைகளை பார்த்த அவர்கள் சுமார் 10 பவுன் நகை தேர்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே இருக்கிறார்? அவரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு ஊழியர்கள் என்ன காரணம்? எங்களிடம் சொல்லுங்கள்? என்று கேட்டும் பதில் அளிக்கவில்லை. உடனடியாக அருகில் இருந்த கடையின் மேலாளர் என்ன விவரம் என்று எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

உடனே அந்த 2 பெண்களும், நாங்கள் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களிடமிருந்த அடையாள அட்டையை காண்பித்தனர்.

மேலும் கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சாலைத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (வயது40), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ராஜலட்சுமி ராமநாதபுரத்தில் மருத்துவமனை நடத்தி டாக்டர் என போலியாக தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து இந்தப் பெண்கள் தமிழகம் முழுவதும் வேறு நகைக்கடையில் கைவரிசை காட்டி உள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News