உடுமலையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை
- போலீசார் விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டிற்குள் அரிவாள் மற்றும் கட்டர் கிடந்தது. அதன் மூலம் கொள்ளையர்கள் கதவை உடைத்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கணேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 55). இவர் உடுமலை கடைத்தெருவில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மனைவியை சிகிச்சைக்காக சேர்த்தார்.
நேற்றிரவு மனைவியுடன் மருத்துவமனையில் தங்கிய கந்தவேல் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி.தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீட்டிற்குள் அரிவாள் மற்றும் கட்டர் கிடந்தது. அதன் மூலம் கொள்ளையர்கள் கதவை உடைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டின் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அப்பகுதி வழியாக மர்மநபர்கள் வந்திருக்கலாம் என தெரிகிறது. வடமாநில தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.