உள்ளூர் செய்திகள் (District)

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்: 8 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு

Published On 2023-11-15 09:52 GMT   |   Update On 2023-11-15 09:52 GMT
  • வாணியாறு அணையிலிருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு, பைப்லைன் அமைக்க 1.38 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறையாக போடப்பட்டுள்ளது.
  • பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த, 13 பேர், காங்., வி.சி., கட்சியில் தலா ஒருவர் என 15 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

பேரூராட்சி தலைவராக, தி.மு.க.வை சேர்ந்த மாரி, துணைத்தலைவராக ரவி உள்ளனர். இதில், தி.மு.க., மற்றும் காங்., கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் என 8 பேர் சேர்ந்து, பேரூராட்சி தலைவர் மாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் புகார் மனு அளித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், அன்றாட அத்தியாவசிய தேவை பணிகளை செய்யவிடாமல் செயல் அலுவலரை, பேரூராட்சி தலைவர் மாரி தடுத்து வருகிறார். இவரது நெருக்கடியால், ஏற்கனவே பணியாற்றிய செயல் அலுவலர் குமுதா மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். வாணியாறு அணையிலிருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு, பைப்லைன் அமைக்க 1.38 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறையாக போடப்பட்டுள்ளது.

தனக்கு ஒத்துழைப்பு வழங்காத செயல் அலுவலர் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி வருகிறார். எனவே இவரை பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி கூறியதாவது:-

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தற்போதைய செயல் அலுவலர் கலைராணி, 35 லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அவரது தூண்டுதலின்படி கவுன்சிலர்கள் என் மீது தவறான தகவல்களை கூறுகின்றனர். ஆக்கிரமிப்பிலுள்ள, 15 கோடி ரூபாய் மதிப்பிலான பேரூராட்சி இடத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். நான் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், பேரூராட்சி செயல் அலுவலர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் கூறி வருவது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News