தமிழ்நாடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் 2 பேரை நியமித்தது ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-03-03 22:59 GMT   |   Update On 2023-03-03 23:16 GMT
  • குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது.
  • தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர்.

மதுரை:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டது.

இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக், பரமேசுவரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயபாலன், பிரபு ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயபாலன், பிரபு ஆகியோர் 2021-ம் ஆண்டிலேயே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் நியமனத்துக்கு எதிராக 2022-ம் ஆண்டில்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இது ஏற்புடையதல்ல என்று வாதாடினார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. இந்த நியமனம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி உள்ளனர். அவர்களை முறைப்படி அர்ச்சகராக கோவில் அறங்காவலர் நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர் 8 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News