உள்ளூர் செய்திகள்

பவானியில் இன்று மாலை செயல் வீரர்கள் கூட்டம்- ஓ.பி.எஸ். அணியினர் மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்

Published On 2023-05-20 06:43 GMT   |   Update On 2023-05-20 06:43 GMT
  • அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
  • கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

பவானி:

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.

அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.

பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News