உள்ளூர் செய்திகள் (District)

அம்மாபேட்டை அருகே 2 வாலிபர்கள் பலி- குடி போதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது

Published On 2023-06-24 04:30 GMT   |   Update On 2023-06-24 04:30 GMT
  • வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது.
  • குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

அம்மாபேட்டை:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா வளையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் கருப்புசாமி (23). பி.பி.ஏ. படித்த இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் ராமர் (19). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர்கள் தங்களின் உறவினர்களான சுப்பிரமணி என்பவரது மகன் கருப்புசாமி (20), ஆறுமுகம் என்பவரது மகன் அன்பரசு (19), பழனிசாமி என்பவரது மகன் பிரசாந்த் (19), கருப்புசாமி மகன் என்பவரது கவியரசு (19) ஆகியோருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை ஒகேனக்கல் சுற்றுலாவுக்கு சென்றனர்.

பின்னர் வரும் வழியில் உள்ள மேட்டூர் அணை பூங்காவுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். இவர்கள் மாலையில் மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டனர். நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மேட்டூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சின்னப்பள்ளம் அருகே மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பஸ்சுக்கு பின்னால் கருப்புசாமி, ராமர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். தற்போது இந்த ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் முன்னால் சென்ற தனியார் பஸ் டிரைவர் 'திடீர்' பிரேக் போட்டார். இதனால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கருப்புசாமி, ராமர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர்.

அப்போது அதே வழித்தடத்தில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது. இதில் பஸ் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு சாமி, ராமர் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி மோதிய வேகத்தில் பஸ் புளிய மரத்தில் மோதி நின்றதால் பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (48) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் குஜராத்தில் இருந்து கோவைக்கு டயர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

மேலும் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

மது குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News