உள்ளூர் செய்திகள்

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு- சென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-11-15 06:01 GMT   |   Update On 2022-11-15 06:01 GMT
  • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
  • தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை:

கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்த முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என அறிவித்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின், மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழக காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடந்து வருகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டறிந்து அனைவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முபினை போன்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளை கண்டுபிடித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் இன்று காலையில் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சென்னை ஏழுகிணறு, சடையப்ப மேஸ்திரி தெரு, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால் பேட்டை சைவ முத்தையா தெரு மற்றும் வடக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு இடம் என பூக்கடை துணை கமிஷனர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

துணை கமிஷனர் ஆல்பர்ட்வின் தலைமையிலான போலீஸ் காலை 6 மணிக்கு இந்த சோதனையை தொடங்கினர். காலை 8 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இதே போன்று புளியந்தோப்பு துணை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட பகுதியான கொடுங்கையூர் வள்ளுவர் தெருவிலும் சோதனை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 43 இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் வட சென்னை பகுதியிலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பலர் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் வசித்து வந்த முகமது சப்ரீஸ் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. இதேபோன்று மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கோவை கார் வெடிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் இன்றைய சோதனையின் போது போலீசுக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்களை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது. சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குள்ளாகி இருக்கும் 5 பேரையும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.

Tags:    

Similar News