அரசு வேளாண் கல்லூரியில் தங்கியிருந்தவர் தற்கொலை- பெற்றோருக்கு உருக்கமான கடிதம்
- கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
- வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
திருவண்ணாமலை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் காயத்ரி (வயது 20).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காயத்ரி விதைப்பண்ணை அருகே உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திரண்டனர்.
அப்போது அவர்கள் மகள் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழுத்தம்தான் காரணம், நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர்.
அவர்களிடம், வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
விடுதியில் உள்ள மாணவியின் அறையில் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மாணவர், மாணவிகள் பேசினாலும் தவறாக பார்க்கின்றனர்.
இங்கிருந்து போனால் போதும். படிக்கவும் முடியவில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அப்பா, அம்மா உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன்.
கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள், நான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை என்னை மன்னித்து விடுங்கள். எனது மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரும் இல்லை என எழுதப்பட்டுள்ளது.
மாணவி காயத்ரியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், அவரது தோழிகள் பாடம் நடத்திய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.