உள்ளூர் செய்திகள்

மத்திய நிதி மந்திரியை கண்டித்து கோவையில் இன்று காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2024-09-14 07:20 GMT   |   Update On 2024-09-14 07:20 GMT
  • வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

கோவை:

கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கிறது.

அதேபோல பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. பன் உள்ளே வைக்கும் கிரீமுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிப்பது ஏன்? என வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

இதனால் கடை நடத்த முடியவில்லை மேடம். இந்த முரண்பாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஜி.எஸ்.டியை வையுங்கள் என நகைச்சுவை தொனிக்க கூறினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் தனியாக சந்தித்து பேசிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்து இருப்பதாக கூறி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.கவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசிய வீடியோவை பா.ஜ.கவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. முரண்பாடு குறித்து உணவக உரிமையாளர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பூங்கா ரவுண்டானாவில் பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News