மாமல்லபுரம் அருகே கணவன்-மனைவியை கொன்று நகைகள் கொள்ளை
- முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
- குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.
நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.
மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.
தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.
மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.