சாலையில் தவித்த மூதாட்டிக்கு உதவிய மாம்பலம் போலீஸ்காரருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பாராட்டு
- மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு மூதாட்டியை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார்.
- சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை மாம்பலம் சிவபிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக்கொண்டிருந்தார். இது தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காக்கும் கரங்கள் செயலி மூலமாகவும் மூதாட்டியின் நிலை பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு தேசிங்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டிக்கு உதவி செய்தார். அவரது பெயர் மற்றும் விவரங்களை கேட்டார். அப்போது மூதாட்டி தனது பெயர் ஜெயம்மா என்று தெரிவித்தார். மற்ற விவரங்களை அவரால் கூற முடியவில்லை.
இதை தொடர்ந்து மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு அவரை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார். இது பற்றி தெரியவந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏட்டு தேசிங்கை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சிறப்பாக பணியாற்றி இருக்கிறீர்கள். இதுபோன்ற பணிகள் தொடரட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதுபோன்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.