நந்தா பட பாணியில் சம்பவம்- தாராபுரம் நகராட்சி கமிஷனர் வீட்டில் பொருட்களை அள்ளிச்சென்ற கொள்ளையன்
- ராமர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தாராபுரத்திற்கு பணிக்கு வந்துள்ளார்.
- சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம். இந்நிலையில் தாராபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.பி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வருகிறார்.
தாராபுரம்:
நடிகர் சூர்யா நடித்த "நந்தா" படத்தில் காமெடி நடிகராக வரும் கருணாஸ் நீதிபதி வீட்டில் அவர் தான் வீட்டு பொருட்களை எடுத்து வரச்சொன்னார் என்று பக்கத்து வீட்டு பெண்ணிடம் சொல்லி டெம்போவில் பொருட்களை அள்ளிச்செல்வார். அதேபோல ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்துள்ளது.
தாராபுரம் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் ராமர் (வயது 52). இவர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று தாராபுரத்திற்கு பணிக்கு வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம். இந்நிலையில் தாராபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.பி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வருகிறார்.
வார இறுதி விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று விடுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்னர் இன்று காலை தாராபுரம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த டிவி, ப்ரிஜ், பீரோ, லேப்டேப், டைனிங்டேபிள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் மர்ம நபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது நீங்கள்தான் எடுத்து வர சொன்னதாக கூறி டெம்போவில் வந்த ஒருவர் எடுத்து சென்றதாக கூறினர்.
இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.