வண்டலூர் பூங்காவில் இரண்டு நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்
- தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர்.
- வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, லயன்சபாரி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து விலங்குகள், பறவைகளை ரசித்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர்விடுமுறையையொட்டி வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் பூங்காவில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதேபோல் தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர். தீபாவளி விடுமுறை கடந்த 2 நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் பூங்காவிற்கு வந்து உள்ளனர். இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, தீபாவளி விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் 20 ஆயிரம் பேர் வண்டலூர் பூங்காவிற்கு வந்து இருக்கிறார்கள். லயன்சபாரி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. ஏராளமானோர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.