உள்ளூர் செய்திகள்

சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து: கோவையில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

Published On 2024-11-14 08:38 GMT   |   Update On 2024-11-14 08:38 GMT
  • கோவை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இன்று காலை டாக்டர்கள், பணிக்கு செல்லாமல் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு திரண்டனர்.
  • அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

கோவை:

சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரை, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டரை கத்தியால் குத்திய வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இன்று காலை டாக்டர்கள், பணிக்கு செல்லாமல் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களுக்கு ஆதரவாக ரேடியேஷன் துறை, மருந்தாளுனர்கள், செவிலியர் சங்கங்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசும்போது, அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி பேசினர். அதன் பிறகு தமிழக அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நர்சுகள் மூலம் பிற நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 

Tags:    

Similar News