உள்ளூர் செய்திகள்

காபியில் விஷம் கலந்து இளம்பெண் கொலை- கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் கணவர் வீட்டார் ஆத்திரம்

Published On 2024-09-01 02:06 GMT   |   Update On 2024-09-01 02:06 GMT
  • கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா(வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி யாஸ்பின்(47). இவர்களுக்கு இம்ரான்(27), முக்தார்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது-நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது உடல், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் காபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார், இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனை அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதை அவரது பெற்றோரால் கொடுக்க முடியவில்லை.

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்து உள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Tags:    

Similar News