உள்ளூர் செய்திகள் (District)

வானகரத்தில் இன்று மாலை நடக்கிறது- எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா

Published On 2022-12-19 09:35 GMT   |   Update On 2022-12-19 09:35 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானகரம் வருவதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா வானகரத்தில் உள்ள ஏசு அழைக்கிறார் வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமத்துவத்தை விதைக்கும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது.

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி பேராயர்களுக்கு ஊட்டுகிறார். பின்னர் கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை வழங்குகிறார்.

விழாவிற்கு தொடக்கமாக பிஷப் ராஜாசிங் துவக்க ஜெபம் ஏறெடுக்கிறார். லெப்டினண்ட் கர்னல் எம்.ஆபிரகாம் லிங்கன் வேதாகமம் வாசிக்கிறார். ஜாலி ஆபிரகாம் குழுவினர் மற்றும் சென்னை சர்ச்பார்க் பள்ளி மாணவிகள் பாடல்கள் பாடுகின்றனர்.

பாதிரியார் ஸ்டேன்லி செபாஸ்டியன் ஆயர் எஸ்.ராபின் ரவிக்குமார் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகின்றனர். சி.எஸ்.ஐ. முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம் கிறிஸ்துமஸ் செய்தி வழங்குகிறார்.

முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் வாழ்த்துரை வழங்குகிறார். நிகழ்ச்சியை சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தொகுத்து வழங்குகிறார்.

முடிவில் சிறுபான்மை பிரிவு பொருளாளர் டி.ஜான் மகேந்திரன் நன்றி கூறுகிறார். ஆயர் ஜெ.சார்லஸ் வெஸ்லி நிறைவு ஜெபம் செய்ய விழா நிறைவடைகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானகரம் வருவதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News