உள்ளூர் செய்திகள்

சிமெண்டுகள் பெயர்ந்து உடைந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்-பொதுமக்கள் அச்சம்

Published On 2024-02-14 09:44 GMT   |   Update On 2024-02-14 09:44 GMT
  • பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
  • மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.

இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News