உள்ளூர் செய்திகள்
கைதான செங்கோட்டையன், சடையப்பன்.

கடம்பூர் வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2022-07-24 03:57 GMT   |   Update On 2022-07-24 03:57 GMT
  • யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
  • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள அத்தியூர் என்ற பகுதியில் அழுகிய நிலையில் ஒரு யானை பிணமாக கிடந்தது.

இதை ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனச்சரகர் இந்துமதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஆண் யானை என்று தெரிய வந்தது.

மேலும் அந்த யானையின் 2 தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் மூலம் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்தியூர் புதூரை சேர்ந்த செங்கோட்டையன் (40), சடையப்பன் (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்ததாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் வெட்டி எடுக்கப்பட்ட தந்தம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனால் தந்தத்தை கைப்பற்ற முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே 17 வயது சிறுவனை அழைத்து வந்ததால் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் வனச்சரகர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் வனத்துறையினரிடம் சிறுவன் எங்கே என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

வனப்பகுயில் யானை இறந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் யானை இறந்ததும் தெரிந்திருக்கும். தந்தங்களையும் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் ரோந்து பணியில் அலட்சியமாக ஈடுபட்டதால் யானை இறந்தது தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றனர்.

Tags:    

Similar News