உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க. வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்

Published On 2023-02-02 03:56 GMT   |   Update On 2023-02-02 03:56 GMT
  • வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
  • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 10-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். இதில் முதல் நாளில் 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேர் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்றும் சுயேச்சைகள், சில அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். 2-வது நாளில் 6 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 நாட்களில் மட்டும் 10 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாளை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனால் நாளை ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதனையடுத்து தேர்தல் பிரசார களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

Tags:    

Similar News