அரிசியில் விஷம் கலந்து 17 மயில்களை கொன்ற விவசாயி கைது
- பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது.
- மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்து ஊராட்சிக்குட்பட்ட பொட்டிநாயக்கம்பட்டியில் நரிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தின் அருகே ஓடையில் 17 மயில்கள் இறந்து கிடப்பதாக கன்னிவாடி வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில், வனவர்கள் அய்யப்பன், செல்வம், வனக்கப்பாளர் கல்யாணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது தோட்டம் மற்றும் ஓடைபகுதியில் 8 ஆண் மயில்கள், 9 பெண் மயில்கள் என 17 மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவரை கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மயில்களை விஷம் வைத்து கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விவசாயி முருகன் மயில்களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது. இதனால் கோபமடைந்த விவசாயி முருகன் அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட 17 மயில்கள் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன என்று வனத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விவசாயி முருகனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் தேசிய பறவையான 17 மயில்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.