பொன்னேரி அருகே வீடுபுகுந்து பணம் இல்லாததால் மூதாட்டியை சரமாரியாக தாக்கிய கொள்ளை கும்பல்
- போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன வேம்பாக்கம் ரெயில்வே சாலை அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வருபவர் கோமளா (வயது65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கோமளா தூங்கினார். அதிகாலையில் அவர் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோமளா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்த போது கோமளா ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகம் தாக்கப்பட்டதால் வீங்கி இருந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மூதாட்டி கோமளாவை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் நள்ளிரவில் கொள்ளைகும்பல் குடிசை வீட்டுக்குள்புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சத்தம்கேட்டு கோமளா எழுந்ததும் அவரை மிரட்டி உள்ளனர்.
பின்னர் வீட்டில் நகை-பணம் பெரிய அளவில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கோமளாவை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த நகை, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
மூதாட்டி கோமளா தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொள்ளை கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.