மதுரை அருகே பஸ் நிறுத்த மேற்கூரையை திருடிச்சென்ற கும்பல்
- பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது.
- நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே திண்டுக்கல்-காரைக்குடி சாலை உள்ளது. இந்த சாலையில் காரியேந்தல்பட்டி விலக்கு பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சிமெண்டால் ஆன பயணிகள் இருக்கையும், தகர செட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஸ் நிறுத்தத்தை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகர செட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.