கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
- ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திரா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லோடு வேன் டிரைவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ் (வயது 32) என்பவரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.
லோடு வேனுடன் ரேசன் அரிசியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.