உள்ளூர் செய்திகள் (District)

அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2024-09-01 07:40 GMT   |   Update On 2024-09-01 07:40 GMT
  • ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
  • விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து ஒருங்கிணைந்த சேவை மைய குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது இந்த குழுவினரிடம், கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள், இந்த கல்லூரியில் பணியாற்றி வரும் 2 தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்.சி.சி மாஸ்டர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதை கேட்டதும் அதிர்ச்சியான குழுவினர் நேராக வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து, புகார் அளித்தனர். புகாரின் பேரில் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பேராசிரியர்கள் உள்பட 4 பேரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News