திருப்பூரில் பலத்த மழை- 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- 25-வது வார்டுக்குட்பட்ட எஸ்.பி.நகர் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.
- பல்லடம் பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் அண்ணா நகர், மகாலட்சுமி புரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாநகரில் பெய்த மழையின் காரணமாக அவினாசி ரோடு, பி.என்.ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக அவினாசி சாலை காந்திநகர் 80 அடி ரோட்டில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீர் பாய்ந்தது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
25-வது வார்டுக்குட்பட்ட எஸ்.பி.நகர் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அந்தப் பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.
பல்லடம் பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் அண்ணா நகர், மகாலட்சுமி புரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.