உள்ளூர் செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக வருமான வரி சோதனை: கொள்முதல் ஆவணங்கள் அதிரடி ஆய்வு

Published On 2023-09-21 10:39 GMT   |   Update On 2023-09-21 10:39 GMT
  • கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்களை திரட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • தூத்துக்குடியில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை:

தமிழக அரசின் மின் வாரியத்தின் கீழ் இயங்கி வரும் மேட்டூர், தூத்துக்குடி, வட சென்னை அனல்மின் நிலையங்களுக்கு தேவையான கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வருமானவரி துறையினர் நேற்று அதிரடி சோதனையை தொடங்கினார்கள். சென்னையை சேர்ந்த 3 நிறுவனங்கள் மற்றும் பொன்னேரியை மையமாக கொண்டு, செயல்பட்ட ஒரு நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த 4 நிறுவனங்களின் மூலமாகத்தான் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான கண்வேயர் பெல்ட், கேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போலியான ரசீதுகளை போட்டு சப்ளை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரி சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதன் அடிப்படையிலேயே இன்று 40 இடங்களிலும் 2-வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகேந்திரா ஜெயின் என்பவரின் வீட்டிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனை காலை 11 மணி அளவில் நிறைவு பெற்றது. இதுபோன்று மேலும் சில இடங்களிலும் சோதனை முடிவுக்கு வந்துள்ளது.

வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது மின் வாரியத்தின் மூலமாக அனல் மின் நிலையங்களுக்கு வாங்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? அவைகள் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய தகவல்களையும் 2-வது நாள் சோதனையின்போது அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

இப்படி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்களை திரட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களை பெற்றனர். அனல் மின்நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இன்று 2-வது நாளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக இன்று 11 பேர் கொண்ட அதிகாரிகள் கார் மூலம் வந்தனர். அனல் மின்நிலையத்திற்கு சென்ற அவர்கள் துணை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News