கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
- செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த நபர்கள் ராமரின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து திடீரென சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 55 கிராம் எடை கொண்ட 2 தங்க நகைகளை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக கடையம் போலீசில் சங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நகையின் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே சாலையில் செட்டிமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.