இளைஞர்கள் போதை பொருளை கைவிட்டு நேர் வழியில் செல்ல வேண்டும்- கமல்ஹாசன் பேச்சு
- பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம்.
- எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 15-ந்தேதி இரவு கோவை வந்தார்.
நேற்று கமல்ஹாசன் தனியார் திரையரங்கில் நடந்த விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து இரவு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளிக்கு கமல்ஹாசன் வந்தார்.
அங்கு படிக்கும் மாணவிகளுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-
நான் படித்த பள்ளியில் நிறைய வசதி இருந்தும் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் நீங்கள் வசதிகளின்றி பயில்வது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்பள்ளியில் கழிவறை கட்டுவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதற்குள்ளாக அரசே முன்வந்து கழிவறை கட்ட உள்ளது. அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமையாக எண்ணுகிறேன்.
இந்த பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம். எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனை நான் தமிழனின் கடமையாய் நினைத்து செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நடிகர் கமல்ஹாசனை நாங்கள் பார்த்ததில் பெரும் பேரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்தது ஆனந்தமாக உள்ளது என்றனர்.
தொடர்ந்து கமல்ஹாசன் கோவை கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்றார். அங்கு அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இந்த பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருந்து வருகிறது.
அவர்களுக்கு நாங்கள் எங்கள் சொந்த செலவில் ஒரு கழிவறையை கட்டி தர உள்ளோம். நான் இதை எனது தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை.
ஆனாலும் இதனை நாங்கள் செய்து தருகிறோம். அதனை நீங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
அதை பார்வையிடுவதற்காக நான் மீண்டும் வருவேன். அப்போது கழிவறை சுத்தம் இல்லை என்றால் நானே இறங்கி சுத்தம் செய்வேன். இந்த பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. எனவே இளைஞர்கள் அதனை கைவிட்டு நேர்வழியில் செல்ல வேண்டும். இதனை தாய்மார்கள், குடும்பத்தினர் கண்காணிக்க வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசிலும் நாங்கள் கோரிக்கை வைப்போம்.