காவேரி கூக்குரல் சார்பில் 'கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்' கருத்தரங்கு: 15-ந்தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது
- மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!' என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பெரிய அளவில் நடக்க உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி நிலத்தல் 50 சதவீத நிலம் மானாவாரி நிலமாகவே உள்ளது. இந்நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் பெற முடியும். சந்தனம், செம்மரம், கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டு வாகை, நாவல் போன்றவை மானாவாரி வளர்ப்புக்கு உகந்த மரங்களாகும். குறிப்பாக வறட்சியான நிலங்களில் சந்தனம் மற்றும் செம்மரம் நன்றாக வளர்கிறது, இம்மரங்களுக்கு அதிக நீர் தேவையில்லை. இம்மரங்கள் அதிக விலை மதிப்புடையவை என்பதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானம் நிச்சயம்.
கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்க உள்ளார்கள். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் பங்கேற்க உள்ளார்கள். மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்குவார்கள்.
விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல், நதிகளின் நீர் ஆதாரம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளதால் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நட விவசாயிகளை ஊக்குவிக்கிறது. இதுவரை ஈஷா ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 46 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் பலா சாகுபடி நுட்பங்கள், சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி போன்ற பயிற்சிகளையும் நடத்தியது.
சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள துரைசாமி அவர்களின் சந்தனமரப் பண்ணையில் நடைபெற உள்ளது. மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.
காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார்.