பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் ஒரு மாதத்தில் 500 மி.கனஅடி வந்து சேர்ந்தது
- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
- பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவில் தற்போது 39 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்தத் தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 328 கன அடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை ஒரு மாதத்தில் பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 27.70 அடியாக பதிவானது. 1.270 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவில் தற்போது 39 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் என்று தெரிகிறது.