கியாஸ் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் குவிந்ததால் தள்ளுமுள்ளு- 10 பேர் மயக்கம்
- கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
- மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் கியாஸ் நிறுவன ஏஜென்சியில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றி உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த கிராமமக்கள் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கியாஸ் நிறுவனத்தினர் ஆதார் விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்காவிட்டால் கேஸ் பதிவு செய்ய முடியாது, மத்திய அரசின் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆதார் விபரங்களை பதிவிட நேற்று ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் குவிந்தனர். மேலும் யாருடைய பெயரில் கியாஸ் இணைப்பு உள்ளதோ அவர்கள் வரவேண்டும் என்று கூறியதால் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் முதியோர்,பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது. ஆதார் இணைப்பு குறித்து கியாஸ் நிறுவனம் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.