கயத்தாறு அருகே விபத்து- நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
- தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பனிக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபநாசம். விவசாயி. இவரது மகன் வெயில்ராஜ்(வயது 23).
இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள கையுறை தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுப்பதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
கயத்தாறு அருகே சவலாப்பேரி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வெயில்ராஜ் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.