மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.
மதுரை:
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சியை ஏற்கும் விதமாக கடந்த 30-ந்தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இதையடுத்து சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்குமேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.
வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகரை, மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுதினம் (5-ந்தேதி) அதிகாலையில், தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.