உள்ளூர் செய்திகள் (District)

மலை கிராமத்திற்கு சென்று வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் கருத்தடை செய்வதன் அவசியம் குறித்து எடுத்து கூறிய போது எடுத்த படம். அருகில் கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் பலர் உள்ளனர்.

13 குழந்தைகளின் தந்தைக்கு போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்

Published On 2023-04-02 07:42 GMT   |   Update On 2023-04-02 07:42 GMT
  • 13 குழந்தைகள் பெற்றதால் குழந்தைகளின் தாய் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
  • பெண்ணின் கணவருக்கு ஆண்களுக்கான அதிநவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஒன்னகரை என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு விவசாய கூலி தொழிலாளிக்கு ஏற்கனவே 7 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்கைள் என மொத்தம் 12 குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு கடைசியாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 13-வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை 3 கிலோ எடையில் பிறந்தது.13 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

13 குழந்தைகள் பெற்றதால் குழந்தைகளின் தாய் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவருக்கு ஆண்களுக்கான அதிநவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர். ஆனால் அவர் அச்சம் அடைந்து மறுப்பு தெரிவித்து வந்தார். மருத்துவ குழுவினர் 8 முறை அவரது வீட்டிற்கு சென்று உள்ளனர். ஆனால் அவர் மருத்துவ குழுவினர் வரும் போதெல்லாம் வனப்பகுதியில் ஓடி மறைந்து கொண்டார்.

இந்த நிலையில் கடைசி முயற்சியாக வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் காவல் துறை மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு உதவியுடன் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் நேற்று ஒன்னகரை கிராமத்திற்கு நேரடியாக சென்று அவரை ஆண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.

ஆனால் அவர் தானும் செய்து கொள்ள முடியாது தனது மனைவியும் செய்து கொள்ள முடியாது என்று கூறி பிடிவாதம் பிடித்தார். மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு அது குறித்தான பக்க விளைவுகளை எடுத்துக்கூறி அவரை சம்மதிக்க வைத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் 5 நாட்களுக்கு தேவையான அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் மருத்துவ குழுவினரின் சொந்த செலவில் வாங்கி அவரது மனைவியிடம் கொடுத்து விட்டு அவருக்கு பாதுகாப்பாக 2 நாட்களுக்கு ஆஷா பணியாளர்களை உடன் இருக்க வைத்தனர்.

பின்னர் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவருக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்து அவருக்கு ஊக்கத்தொகையும் அளித்து மீண்டும் அவரை பத்திரமாக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வந்தனர். ஒரு வழியாக போராடி 13 குழந்தைகளின் தந்தைக்கு மருத்துவ குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.

Tags:    

Similar News