மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,176 கன அடியாக அதிகரிப்பு
- அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 2,162 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,176 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.68 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.