உள்ளூர் செய்திகள்

உறையூர் வெக்காளியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Published On 2022-07-04 09:46 GMT   |   Update On 2022-07-04 09:46 GMT
  • திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கும் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
  • யாகசாலையை ஆய்வு செய்த அவர் வெக்காளியம்மனை தரிசனம் செய்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி இரண்டு கோவில்களிலும் யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் இன்று காலை சமயபுரம் மற்றும் உறையூர் கோவில்களில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலை சுமார் 5 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அமைச்சர் சேகர் பாபு, அங்கு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் இன்று மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து காலை 7 மணிக்கு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கும் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். யாகசாலையை ஆய்வு செய்த அவர் வெக்காளியம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் மிகுந்த திருப்தி அளிப்பதாகவும், பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடித்து விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு சென்றார். அங்கு கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் மூலவர் ரெங்கநாதர், தாயார் சன்னதிகளில் வழிபாட்டை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இதையடுத்து அவர் சென்னை புறப்பட்டார்.

Tags:    

Similar News