உள்ளூர் செய்திகள் (District)

தேனி அருகே மாயமான பள்ளி மாணவர்கள் நாமக்கல்லில் மீட்பு

Published On 2024-01-04 10:58 GMT   |   Update On 2024-01-04 10:58 GMT
  • மாயமான மாணவர்கள் நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தனர்.
  • மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தேனி மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்த கார்த்திக் மகன் பரத் (13). பால்பாண்டி மகன் சிவனேஷ்வரன் (13). இவர்கள் 2 பேரும் மயிலாடும்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்ற மாணவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு வரை அவர்கள் வராததால் பெற்றோர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவர்களின் புகைபடங்களை வைத்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே மாயமான மாணவர்கள் நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த நல்லூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் தாங்கள் தேனியை சேர்ந்தவர்கள் என்றும், இங்கு கபடி போட்டி நடப்பதால் அதனை பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தேனி மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் மயிலாடும்பாறை போலீஸ் ஏட்டு சமுத்திரம் நாமக்கல் சென்று மாணவர்கள் 2 பேரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News