உள்ளூர் செய்திகள்

ஆம்னி பஸ்சில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு- 37 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2022-12-28 10:42 GMT   |   Update On 2022-12-28 10:42 GMT
  • பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.
  • அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈரோடு:

புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த ஆம்னி பஸ் ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது பஸ்சின் பின்பக்க சக்கர பகுதியில் இருந்து அதிகளவில் புகை வந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் சத்தம் போட்டதால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த 37 பயணிகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். பஸ்சில் டிரைவர், கிளீனர் என 2 பேர் மொத்தம் 39 பேர் இருந்தனர்.

உடனடியாக டிரைவரும், கிளீனரும் பஸ்சில் இருந்து வெளியே வந்து பின்புற சக்கர பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தொடர்ந்து புகை வந்ததை உறுதி செய்தனர். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறங்க செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அரை மணி நேரம் புகை வரும் பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

பின்னர் பரிசோதித்த போது பிரேக் ட்ரம் தேய்ந்து உராய்வு ஏற்பட்டதால் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் புகை வருவது கண்டறியப்பட்டு தக்க நேரத்தில் தீயணைப்புத் துறையினர் புகையை நிறுத்தினர்.

பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் அங்கு வந்து பஸ்சை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த டிரைவர் பரமேஸ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பயணிகளை வேறு பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News