பழனியில் இன்று கோவில் அதிகாரியை கண்டித்து அடிவாரத்தில் கடைகள் அடைப்பு
- வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
- தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.