உள்ளூர் செய்திகள்

உறவினர் வீட்டிற்குள் முகமூடியுடன் நுழைந்து சிறுமியை கடத்த முயன்ற சிறுவன்

Published On 2023-05-20 07:40 GMT   |   Update On 2023-05-20 07:40 GMT
  • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
  • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.

அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.

விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.

தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News