உள்ளூர் செய்திகள் (District)

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- ஏற்காடு மலைப்பாதையில் மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்தது

Published On 2024-10-16 09:22 GMT   |   Update On 2024-10-16 09:22 GMT
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
  • ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் முழுவதும் சாரல் மழையாக நீடித்தது.

குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்த படி இருந்தது. இரவில் மழை குறைந்தது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வீரகனூர், கரியகோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வயல்வெளிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாய பயிர்களும் செழித்து வளரும் நிலையில், கால்நடைகளுக்கும் தேவையான தீவணங்கள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று பெய்த தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் இரவு முழுவதும் மழை பெய்தது.

இந்நிலையில் இன்று காலை ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

இதில் மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் மின்சார கம்பிகளும் சாலையில் விழுந்தது. மரம் சாலையின் குறுக்கே கிடந்ததால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 32 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காப்பி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 16.9, ஏற்காடு 5.8, வாழப்பாடி 11.2, ஆனைமடுவு 5, ஆத்தூர் 7.8, கெங்கவல்லி 12, தம்மம்பட்டி 13, ஏத்தாப்பூர் 8.கரியகோவில் 21, நத்தக்கரை 21, சங்ககிரி 1.4, எடப்பாடி 2.4, மேட்டூர் 5.2, ஓமலூர் 19, டேனீஸ்பேட்டை 6 மி.மீ. மாவட்டம் முழுவதும் 183.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Similar News