பத்திர பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
- அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
திருத்தணி:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.