உள்ளூர் செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே தாயாருடன் சென்ற இளம்பெண்ணை காரில் கடத்திய உறவினர்கள்

Published On 2022-11-05 11:05 GMT   |   Update On 2022-11-05 11:05 GMT
  • முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள்.
  • ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

திருத்தணி:

பள்ளிப்பட்டு அடுத்த கொடி வளசை காலனியில் வசிப்பவர் சேகர். இவரது மகள் சியாமளா (வயது 24). 10ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

நேற்று சியாமளாவை அழைத்துக் கொண்டு தாய் மஞ்சுளா ஆட்டோவில் பள்ளிப்பட்டு பகுதியில் பஜார் தெருவுக்கு சென்றார். அங்குள்ள கடையில் கொலுசு எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள். ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

தன் மகள் கண்ணெதிரில் கடத்தப்பட்டதை கண்ட தாய் மஞ்சுளா கூச்சல் போடவே பொதுமக்கள் திரண்டனர். இது தொடர்பாக பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸ் குழுவினர் காரை பின் தொடர்ந்து விரட்டினர். ஆந்திரா மாநிலம் சர்க்கரை ஆலை அருகே ஆந்திரா போலீஸ் உதவியோடு பொதுமக்களும் இணைந்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட சியாமளாவை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொடி வலசா கிராமம் அருகிலுள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 27) ஆகிய இருவரும் சியாமளாவை கடத்தியது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் சியாமளாவுக்கு உறவினர்கள் ஆவர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நடந்த இந்த கடத்தலில் ஒரு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

Tags:    

Similar News