உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர், போர்டுகள் அகற்றம்

Published On 2023-05-28 08:06 GMT   |   Update On 2023-05-28 08:06 GMT
  • காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது.
  • மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான கோவில்களும், பட்டுச் சேலை விற்பனை கடைகளும் உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வெளி மாநில வாடிக்கையாளர்களும் காஞ்சிபுரம் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.

சாலை ஓரங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடிய அளவில் விளம்பர போர்டுகளும், நடைபாதை கடைகளும், பேனர்களும் வைத்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான செங்கழுநீர் ஓடை வீதி, மேற்கு ராஜ வீதி,கிழக்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு, உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளையும், விளம்பர போர்டுகளையும், அதிரடியாக அகற்றும் பணியை மேற்கொண்டார். இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு செய்திருந்த விளம்பர போர்டுகள் மற்றும் பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News