ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை வெள்ளம்
- பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
- 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.
பொன்னேரி:
பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கனமழை நீடித்தது. இதனால் தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
பொன்னேரி-திருவொற்றியூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி சென்றனர். முத்து மாரியம்மன் கோவில் அருகில் சாலையில் குண்டும் குழியுமான பெரிய பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து சென்றனர். இதேபோல் பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குறைய வில்லை. இதனால் அவ்வழியே சென்றவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தள்ளியபடி சென்றனர். ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கியது. இன்று காலை 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.
இந்த சுரங்கப்பாதையானது மெதூர், பழவேற்காடு, சின்ன காவனம், பெரிய காவனம், திருப்பாலைவனம் என 100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 2 ராட்சத மோட்டார்கள் மூலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.