ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: 27 பவுன் நகை-ரூ.36 ஆயிரம் பறிமுதல்
- திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்:
புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் குணசேகரின் வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.