தி.மு.க. முன்னாள் அமைச்சர் அறையில் ரூ.11 லட்சம் சிக்கியது
- சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
- சுமார் 5 மணிநேரம் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி:
தி.மு.க. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன். இவர் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இவர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றினாலும், பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.
சம்பவத்தன்று அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வருமான வரித்துறையினர் அவர் தங்கி இருந்த பழைய குற்றாலம் தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் சுரேஷ் ராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு வருமாறு அழைக்கவே, அவரும் விடுதி அறைக்கு வந்து அறையை திறந்து கொடுத்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ.11 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற செய்தி அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த விடுதியின் முன்பு குவிந்தனர். தனியார் விடுதிக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.