பர்கூர் மலைப்பகுதியில் பலாப்பழங்கள் சீசன் தொடங்கியது
- மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.
- பலாப்பழம் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் விளையும் ராகி, கம்பு பச்சைப்பயிர், தட்டைப்பயிர் உள்ளிட்ட தானிய வகைகளும் புளி, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
மேலும் இங்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படுவதால் இந்த பயிர்களை நேரடியாக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். மற்றவைகளை வாரம்தோறும் அந்தியூரில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு மலை வாழ் மக்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.
இதில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் இங்கு விளையும் பலாப்பழம் மிகுந்த ருசியாக இருப்பதினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த பழங்கள் அந்தியூர் தேர் நிலையம் அருகே மலைவாழ் மக்கள் கொண்டு வந்து பழங்களின் அளவிற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்து 200 முதல் 600 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்பனை செய்து வருகின்றனர். இந்த பலாப்பழங்களை மலைவாழ் மக்கள் பறித்து தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டிருந்தால் இதன் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.
இதனால் மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.